22 ஜூலை, 2012

ஆற்றல் வளம்



    

          மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும்.

மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்..
Ø படிம எரிபொருள் ஆற்றல் (Fossil fuel energy)
Ø விறகு (Fire wood) மூலம் கிடைக்கும் ஆற்றல்
Ø நீர் ஆற்றல் (Hydraulic energy)
Ø அணு ஆற்றல் (Nuclear energy)
மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
ü சூரிய ஆற்றல் (solar energy)
ü காற்றின் ஆற்றல் (Wind energy)
ü கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
ü கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
ü புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
ü உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
ü உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
ü உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)
     

ஆற்றல் வளங்கள்-2012- NCSC

அன்பு நண்பர்களே,
    இனிய வணக்கம்.
     தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012க்கான ஆய்வுத்தலைப்பு '' ஆற்றல்'' அது பற்றிய விபரம் காண்போம்.
       மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம்.
            
        நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இயற்கை எரி வாயு ஆகியனவற்றைப் படிம எரிபொருள் ஆற்றல் தருவன எனக் குறிப்பிடலாம். பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் பூமியில் புதையுண்ட தாவரம் மற்றும் விலங்குகள், மக்கிப் போய்ச் சிதைவடைந்ததால் உண்டானதே படிம எரிபொருளாகும். இவை பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. புதிதாக உற்பத்தி ஆக இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன் படுத்திக் கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் இவை தீர்ந்து போகலாம். மேலும் இவற்றையும், பல காலமாக எரிபொருளாகப் பயன்பட்டு வரும் விறகையும் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச் சூழல் தூய்மைக் கேட்டினை உருவாக்கும். மேலும் புவி வெம்மை எனும் பெரும் கேட்டினையும் விளைவிக்கும். புவி வெப்பமடைந்தால் கடல் மட்டம் உயருதல், நிலப் பரப்புக்கள் நீரில் மூழ்குதல், பனிப் பாறைகள் உருகுதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றம் அடைதல், வெள்ளம், புயல் போன்றவற்றால் பேரிடர்கள் விளைதல் போன்ற பல தீங்குகள் நிகழும்.
நீர் மின்சக்தி உற்பத்தி செய்வதில், ஏராளமான பொருட் செலவுக்கு ஆளாவது, தகுதியான இடம் இல்லாதது, கட்டுமானத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு அடைவது, அதிகப்படியான இழப்பீடுகள் தர வேண்டியிருப்பது, உற்பத்தி செய்த மின் சக்தியைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்வதால் இடைஞ்சல்களுக்கு ஆளாவது எனப் பல சிக்கல்கள் உள்ளன.