சர்வதேச வாணிபத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும். அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம் பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கும் வகையில் 2001 முதல் ஆண்டுதோறும் ஒரு பொருளில் ஏப்ரல் 26 ம் தேதி ‘உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
அறிவுசார் சொத்து என்பது ஒருவன் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான சமுதாயத்திற்கு பயன்படுகின்ற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாக கருதப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றைமட்டுமே சார்ந்தது என்றகருத்து பழங்கதையாகி, அறிவுத்திறனே முக்கிய காரணி என்றகருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தை பெருக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.
அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படி தெரிந்துகொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.
வேத காலத்திலேயே இந்தியா அறிவுத் திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே வள்ளுவர், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றும் ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்றும் அறிவைப் போற்றி புகழ்ந்துள்ளார்.
ஒரு நாட்டின் ‘வளர்ச்சி’ என்பது தேசிய வருமானத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது 1990ம் ஆண்டு முதல் வளர்ச்சி என்பது மக்களின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றைஉள்ளடக்கிய ‘மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்’ மூலம்கணக்கிடப்படுகிறது.
உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய நிலையில் இளைஞர்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு இந்தியா. 70 சதவீத மக்கள் 35 வயதிற்கும் குறைவானர்கள். இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் இளம் பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்றும், இதற்கு நேர்மாறாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இளம் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மதிப்பீடுகள் கூறுகின்றன. 2020களில் இந்தியாவில் 4 கோடியே 70 லட்சம் இளம் வயது பணியாளர்கள் உபரியாக இருப்பார்கள் என்றும் அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 70 லட்சம் இளைஞர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம் நாட்டில் கல்வியறிவு பெற்றதிறமையான இளை ஞர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்து, இயற்கை யோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
அறிவுசார் சொத்துரிமை பெற வேண்டு மானால் ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத் தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற் கொண்டவரின் அறிவார்ந்த திறமையினை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றைவர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற் காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக் கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் ‘டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் ‘வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.
1. காப்புரிமை, 2. பதிப்புரிமை, 3. வர்த்தக சின்னங்கள், 4. பூகோள அடையாளங்கள்,
5. தொழிலியல் வடிவமைப்புகள், 6. மின்னணு இணைப்புச்சுற்று டிசைன்கள் 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது ‘பேட்டன்ட் ரைட்’ எனப்படும் காப்புரிமை யாகும்.
காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். கண்டுபிடிப்பு என்பது புதியதொரு பொரு ளாகவோ அல்லது அவற்றின் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதாகவோ அல்லது எளிதாக்குவதாகவோ இருக்கலாம். இவை தொழில் பயன்பாடு உடையதாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்க தக்கதாகவும் இருக்க வேண்டும். இத்தகயை அம்சங்களை பெற்றிருந் தால் மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமையில் இருவகை உண்டு.
1.பொருட்களுக்கான காப்புரிமை 2. பொருட் களை தயாரிக்கும் முறைமைக்கான காப்புரிமை.
காப்புரிமை என்பது ஒரு புதிய கண்டு பிடிப்பு பற்றி முழு தகவல்களையும் தெரிவித்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரத்யேக உரிமை பெறுவது. பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கும், பிறர் அறிந்திராத விஷயங்களுக்கும் காப்புரிமை பெறலாம். இதில் தயாரிப்பு முறைகள், புதிய தயாரிப்புகள், அதில் செய்யப்பட்ட மேம்பாடுகள், புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை அடங்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழிநுட்பம் அதற்கு முன் எழுத்து வடிவிலோ அல்லது நடை முறைவடிவிலோ இருப்பது நிரூபிக்கப்பட்டால் அதற்கு காப்புரிமை வழங்கப்பட மாட்டாது. அதேபோல் காப்புரிமை பெறதேவையற்றவை என பட்டியலிடப்பட்ட பிரிவுகளில் உள்ள கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்பட மாட்டாது.
காப்புரிமை பெறுவதன் மூலம் அக்கண்டுபிடிப்பு அவர் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை வேறு எவரேனும் பயன்படுத்தினால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கண்டுபிடிப்பின் தொழில் நுட்பத்தை காப்புரிமை காலத்திற்குள் சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி எவரும் காப்பியடிக்கவோ அல்லது சிறிது மாற்றி பயன்படுத்தவோ முடியாது. காப்புரிமை காரணமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு குறைந்த விலையில் தரமான பொருட்கள் தயாரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுகர்வோர் பெருமளவில் பயனடைவார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் காப்புரிமையால் புதிய உத்வேகம் கிடைக்கும். காப்புரிமை காலம் முடிந்த பின் அந்த புதிய கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமைக் கோரி விண்ணப்பிக்கப்படும் நாளி லிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.
காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியா வின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக் காட்டாக வேப்பம் பொருட்களிலிருந்து தயாரிக் கப்படும் 40 வகை பொருட்களுக்கு அமெரிக் காவும், மேலும் 50 பொருட்களுக்கு பிறநாடு களும் காப்புரிமை பெற்றுள்ளன. ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப் பட்டுள்ளது. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற் றுள்ளது. ஆனால் இந்தியா 8 பொருட்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, பூவந்திக் கொட்டை, மாதுளை போன்றவற்றிற்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெறகுறைந்த பட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிக பட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை பெற்றுத்தரப் படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25000 மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சி பணிகளுக்கு செலவிடப் படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள் களின் பயணத்தைத் துல்லியமாக கணக்கிட்ட வர்கள் இந்தியர்கள். இராமாயண மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிக மாக உள்ளது. ஆகவேதான் இன்றும் கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவில் பெரும்பாலான விஞ்ஞான தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணி யாற்றும் மருத்துவர்கள் பாரதம் திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.
இந்திய அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாக திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும். அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக